தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சினிமா தியேட்டர்களில் 5 காட்சிகள் நடத்திக் கொள்வதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள சினிமா தியேட்டர்களில், தீபாவளி பண்டிகையையொட்டி 5 காட்சிகள் நடத்திக் கொள்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்று தியேட்டர் அதிபர்கள் சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. அந்த கோரிக்கையை ஏற்று, 5 காட்சிகள் நடத்திக் கொள்வதற்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா அனுமதி வழங்கியிருக்கிறார்.
அதற்கு நன்றி தெரிவித்து தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் அபிராமி ராமநாதன் விடுத்துள்ள அறிக்கையில், தமிழகத்தில் பொதுமக்களுக்கு தொன்றுதொட்டு வரும் பல பழக்கவழக்கங்களில் ஒன்று, தீபாவளியன்று ஒரு சினிமாவை பார்த்து மகிழ வேண்டும் என்பது. அப்படி விரும்புபவர்கள் எளிதாக சினிமா பார்ப்பதற்காக கூடுதல் காலை காட்சிக்கு அனுமதிக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு கோரிக்கை விடுத்து இருந்தோம். அந்த கோரிக்கையை ஏற்று முதல்வர் ஜெயலலிதா, தீபாவளி பண்டிகை முதல் 7 நாட்களுக்கு (26ம்தேதி முதல் 1-11-2011 வரை) அனைத்து திரையரங்குகளிலும் கூடுதல் காலை காட்சி நடத்த அனுமதி வழங்கியிருக்கிறார்கள். அதற்காக, முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம், என்று கூறியுள்ளார்.
தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் சார்பில் அதன் தலைவர் ராம.மு.அண்ணாமலை, பொதுச்செயலாளர் ஆர்.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க, தீபாவளி பண்டிகையையொட்டி திரையரங்குகள் 5 காட்சிகள் நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதாவது வருகிற 27, 28, 31 மற்றும் 1-11-2011 ஆகிய தேதிகளில் அதிகப்படியாக ஒரு காட்சி நடத்திக்கொள்ள அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. 26, 29, 30 ஆகிய தேதிகளில் அரசு விடுமுறையானதால், அந்த நாட்களிலும் அதிகப்படியாக ஒரு காட்சி, அதாவது 5 காட்சிகள் நடத்திக்கொள்ளலாம், என்று கூறியுள்ளனர்.
No comments:
Post a Comment